search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு தீர்ப்பு"

    விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
    விழுப்புரம், 

    விழுப்புரம் அருகே உள்ள குத்தாம்பூண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 55), விவசாயி. இவருடைய அக்காள் அஞ்சலத்தின் மகள் தென்றல் என்பவர், அரசு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

    இதற்காக வருமான சான்றிதழை பெறுவதற்காக கடந்த 7.1.2011 அன்று குத்தாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலராக இருந்த சீத்தாராமன் (57) என்பவரை ராஜீவ்காந்தி அணுகினார். அதற்கு ரூ.1,500-ஐ லஞ்சமாக தர வேண்டும் என்று சீத்தாராமன் கூறினார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ராஜீவ்காந்தி கூறவே அப்படியானால் ரூ.500-ஐ குறைத்துக்கொண்டு ரூ.1,000 மட்டும் தருமாறு கறாராக கூறினார்.

    இதையடுத்து அந்த லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சீத்தாராமனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு அவர் துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதுசம்பந்தமான வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே சீத்தாராமன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சீத்தாராமன் சிறையில் அடைக்கப்பட்டார்.
    கொலை வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி (வயது 20). இவர், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோகரனுக்கும் (33) இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் சாந்தியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் தேனிமலையை சேர்ந்த முருகன் (35), மனோகரனை தட்டி கேட்டு உள்ளார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மனோகரன், முருகனை தள்ளியுள்ளார்.

    இதில் கீழே விழுந்த முருகன் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தார். அதில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மனோகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    விளாத்திகுளம் அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேருக்கு 10 ஆண்டுக்கு பின் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
    தூத்துக்குடி:

    விளாத்திக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இவற்றை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி மயில்வேட்டையாடிய விளாத்திக்குளம் அருகேயுள்ள சிதம்பர நகரை சேர்ந்த தெய்வசிகாமணி, சந்தனக்குமார், முருகன் ஆகிய 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். இது தொடர்பான வழக்கு விளாத்திக்குளம் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் தெய்வசிகாமணி, சந்தனக்குமார், முருகன் ஆகிய 3 பேருக்கும் வனவிலங்கு தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 10வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வனஅலுவலர் சம்பத் , வனச்சரகர் சிவராம் ஆகியோர் கூறியதாவது:-

    தேசிய பறவையான மயில்களை வேட்டையாடுவது கண்டறியப்பட்டால் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 3முதல் 5ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை சேதப்படுத்துவதால் மயில்களை கொல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாயப்பயிர்கள் மயில்களால் சேதத்திற்குள்ளானால் இதற்கு விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளும் இருக்கிறது. எனவே, மயில்களால் ஏதேனும் விவசாயப்பயிர்கள் சேதமானால் அது குறித்து வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தின் வனப்பகுதிகள் மற்றும் மயில்கள் அதிகமாக வாழும் கிராமப்பகுதிகளில் யாரேனும் மயிலை வேட்டையாடினால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திடவேண்டும். தேசியப்பறவையான மயில்களை வேட்டையாடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×